படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, September 19, 2004

நொய்யல்

வீட்டிலிருந்த தமிழக வரைபடத்தைக் கண்டுகொண்டிருந்த போது நொய்யலாற்றை நோக்கி கவனம் சென்றது. கோயமுத்தூரினருகே அது இருந்ததாலோ!

காட்டாறான நொய்யல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெள்ளிங்கிரி மலையிலிருந்து (இம்மலைக்கு ஏறிச்செல்வோரும் உண்டு; சென்று வந்தவர்கள் எழுதுக) துவங்கி (இதன் வழியில் கோவை, திருப்பூர் ஆகிய நகரங்கள்
அமைந்துள்ளன), கிட்டத்தட்ட 180 கி.மீ பயணித்துக் காவிரியில் கலக்கிறது. நான் பார்த்த வரையில் இதில் மழைக்காலத்தில் மட்டுமே கலங்கிய வெள்ள நீர் சில நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும்; மற்ற சமயங்களில் பேருந்தில் செல்லும்போது எட்டிப்பார்த்தால் நாணல் செடிகளினூடே சாக்கடை நீர் ஓடுவதுதான் தெரியும். கீழுள்ள படத்தில் ஆற்றின் தடத்தைச் செந்நிறத்தில் சுமாராகக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.



கோவைக்கு அருகே இவ்வாற்றின் கரையிலுள்ள பேரூர் என்ற ஊரில் புகழ்பெற்ற பட்டீசுவரன் என்ற சிவன் கோவில் ஒன்றுள்ளது (அதனுள்ளில் உள்ள மண்டபம் ஒன்றிலிருக்கும் அற்புதமான சிற்பங்களை சில மனித ஜந்துகளிடமிருந்து காப்பாற்ற கம்பி வலை போட்டு வைத்திருக்கிறார்கள்!). ஒரு காலத்தில், ஆலயத்திற்கு செல்லும் மக்கள் அருகிலுள்ள நொய்யலாற்றில் முழுகிவிட்டுப் போவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அங்கு சென்ற போது, பெருங்குழியில் கலங்கிய நீர் தேங்கியிருந்ததை மட்டும்தான் காணமுடிந்தது. அதைப் பார்த்தால் ஆறென்று சொல்லத் தோன்றாது.

கோவையில் சாக்கடை கலக்கிறதென்றால், திருப்பூரில் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் நச்சு வேதிப்பொருட்கள்! திட்டமின்றி விரிவடைந்துகொண்டிருக்கும் இந்நகரங்களால் மக்களுக்கு எந்த அளவிற்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றனவோ, அந்த அளவிற்கு (கூடுதலாகவும்) சூழியல் சீர்கேடுகளின் பலன்களும் கிடைத்துக் கொண்டுள்ளன. இதைப் பற்றி தமிழில் ஒன்றும் பெரிதாக வாசிக்கக் கிடைக்கவில்லை (இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக எழுத நம் பத்திரிக்கைகள் இளிச்சவாயர்களா என்ன!); ஆனால் ஆங்கிலத்தில் கொஞ்சம் கிடைத்தது (சில தொடுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன).

மழை நீர் சேகரிப்பைப் பற்றி இன்று பரவலாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலும் அதைச் சுற்றிலும் உள்ள 19 ஏரிகள் (இப்பொழுது 11தான் உள்ளன), ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு மழைக்காலத்தில் நொய்யலாற்றில் மிகுந்து வரும் நீரால் நிரம்பி, அப்பகுதியின் பாசனம் மற்றும் நிலத்தடி நீராதாரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததாம். எல்லாம் பழங்கதையானது இன்று. அக்கால மக்கள் சிந்தித்துச் செயற்படுத்திய இவ்வரிய அமைப்பை தொழிற்நுட்பத்தில் முன்னேறியதாக தம்பட்டமடித்துக்கொள்ளும் இக்காலத்தவர்களாகிய நாம் தொலைத்துவிட்டுத் தவிக்கிறோம். ஆறுகளைச் சாக்கடைகளாகவும், நச்சுக் கழிவுப் பாதைகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

மேலும் வாசிக்க சில இணைப்புகள்

http://www.hinduonnet.com/thehindu/mp/2003/05/19/stories/2003051900900100.htm
http://www.siwi.org/waterweek2003/Workshop%208%20Oral(30).htm
http://www.rainwaterharvesting.org/Crisis/river-noyyal.htm

4 comments:

சுந்தரவடிவேல் said...

ஆற்றிலே தண்ணீர் ஓடாது, ஓடினாலும் அதிலே எவ்விதக் கட்டுப்பாடோ மாசகற்றுதலோ செய்யப்படாத தொழிற்சாலைக் கழிவு கலக்கும், அதிலும் தப்பினால் புள்ளையார் சிலை ரசாயனம் இருக்கவே இருக்கிறது. இதுகளைத்தான் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

suratha yarlvanan said...

நல்லதொரு கட்டுரையும் சுட்டியும்..அதிலும் தொழில்நுட்பத்தில் முன்னேறியதாக தம்பட்டமடித்துக்கொள்ளும் என்ற வரி உண்மையான வரிகள்.

Kasi Arumugam said...

ராதா,

பேரூரில் எத்தனையோ முறை ஆற்றில் குளித்து கோவிலுக்குப் போயிருக்கிறேன். பழையபடி ஏரிகளையும்(குளங்கள் என்றுதான் கோவையில் அழைக்கப்படும்) வாய்க்கால்களையும் தூர்வாரி உயிரூட்ட தன்னார்வ அமைப்புகள் சில தனியார் நிறுவனங்களோடு இணைந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கொன்டுவந்திருக்கிறார்கள். இன்னும் செய்ய வேண்டியுள்ளது.

வெள்ளிங்கிரி மலைக்குப் போனதைப் பற்றி ஒருநாள் எழுதுகிறேன்.

இராதாகிருஷ்ணன் said...

சுந்தர்: தற்காலச் சூழ்நிலையில் அரசாங்கங்களிடமிருந்து இவற்றையெல்லாம் எதிர்பார்க்கமுடியாது போலுள்ளது.

சுரதா: நன்றி!

காசி: அப்படியா! நீங்கள் 'சிறுதுளி'யைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது குறிச்சி குளத்தில் தூர்வாரிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள்தான் செய்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரியவந்தது. அவ்வமைப்பு நொய்யலாற்றை தூய்மைப்படுத்தவும் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

வெள்ளிங்கிரி மலைப் பயணம் பற்றி சில கதைகளைக் கேட்டுள்ளேன். உங்கள் அனுபவத்தை எழுதுங்கள். எனக்கும் அங்கு சென்று பார்த்துவர ஆசையுண்டு.