இமாலயப் பகுதியில் நடந்த நிலநடுக்கம் மக்களை அளவிட முடியாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஜீவன்களைக் காணும்போது மனம் பதைக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீட்புதவி சென்றடைவதற்குள் இழப்புகள் இன்னும் அதிகமாகக் கூடும். வெறும் கையால் எவ்வளவு செய்துவிட முடியும் அவர்களால்? அமுங்கிய பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து ஓலக்குரல் கேட்பதாகச் சொன்னார்கள், மிகவும் வருத்தமாயிருந்தது.
க்வடமாலா, எல்சல்வடார் முதலான மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றிரண்டு நாட்களாகப் பெய்துவரும் பேய்மழையில் ஒரு கிராமமே நிலச்சரிவில் புதைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தைப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கொடுமையாக உள்ளது.
சமீப காலங்களில் நடக்கும் இயற்கையின் சீற்றங்களைப் பார்க்கும்போது உலக நாடுகள் அனைத்தும் மீட்புதவி மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும் போலுள்ளது.
பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டது போலுள்ளது. இம்முறை ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில். சகட்டு மேனிக்கு கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் போன்றவற்றைப் பெரிய குழிகள் தோண்டி உயிருடனோ, பாதிகொன்றோ அதற்குள் போட்டுத் தீமூட்டிச் சாகடித்துக் கொண்டுள்ளனர். சைபீரியாவிலிருந்து மேற்கு நோக்கிப் பறக்கும் பறவைகளால் அமெரிக்கக் கண்டத்தில்கூடப் பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
மொராக்கோ வழியாக ஸ்பெயின் நாட்டுச் சார்ந்த பகுதிக்குள் நுழைய முற்பட்டு இயலாமற்போனவர்களை, மொராக்கியக் காவலர்கள் பேருந்துகளில் அள்ளிச் சென்று பாலைவனத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டுக் கொண்டுள்ளார்களாம். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, எங்காவது ஏதாவது வேலை பெற்றுவிடும் நோக்கோடு, கடல் வழியாக உயிரைப் பணயமாக வைத்துப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகளுக்கு வர சதா முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு அது எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. எல்லாவற்றையும் தாண்டி வந்து ஐரோப்பிய நாட்டுக் காவலர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் வந்த நாட்டிற்கே ஏற்றிவிடப்படுபவர்கள் ஏராளம்.
ஓரிரு நாட்களாகச் செய்திகளில் அதிகம் தென்படுபவை இவைதான். ம்...
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Sunday, October 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மைதான்.மத்தை கலங்கடிக்கும் வண்ணம் இயற்கையின் சீற்றம் அதிகமாகி கொண்டிருக்கிறது. இறந்தவர் பல்லாயிரக்கணக்கானோர் என்பதும் அதில் ஒரு பள்ளி குழந்தைகள் அனைவரும் அடக்கம் என்பதியும் படிக்கும் போது மனம் வெறுத்து போகிறது
சீற்றத்தைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் மீட்புப் பணிகளில் ஏற்படும் தொய்வாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. :(
Post a Comment