பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
நல்ல நல்ல கதைகள் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
வண்ண வண்ண படங்கள் பேசும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
அறிவை வளர்க்க அன்பாய் உதவும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பாட்டு சொல்லி பாடச் சொல்லும்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
புதுமை உலகம் இனிமை உலகம்
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி
பட் பட் பட் பட்டாம்பூச்சி....
என்ற இனிமையான பாடலுடன் கோயம்புத்தூரிலிருந்து 'தமிழில் முதன்முறையாக' பட்டாம்பூச்சி என்ற பெயரில் 'சிறுவர்களுக்கான சி.டி.மாத இதழ்' ஒன்று சென்ற ஆண்டில் (அல்லது அதற்கு முந்தைய ஆண்டில்) ஆரம்பிக்கப்பட்டது. வெளிவந்த சில மாதங்களிலேயே நின்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாங்குவோரின்மையாலா இல்லை வேறேதும் காரணமா என்று தெரியவில்லை. தமிழுலகில் இதுபோன்று ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்படும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. இருந்தாலும் நல்ல முயற்சி ஒன்று தொடர்ந்திருக்கலாம்.
பட்டாம்பூச்சி இதழ் 2-ல், கிராமத்துப் பாட்டி குழந்தைகளுக்கு குட்டிக் கதை ஒன்றைச் சொல்கிறார். அக்கதையில் மீனிடம் அகப்பட்ட 'நெலப்புழு' (மண்புழு அ நிலப்புழு), மீன்களைப் பார்த்து இவ்வாறு சொல்கிறதாம்:
வாரீர் வாரீர் என்னாலே
வந்து நிற்கிறீர் முன்னாலே
சாகப் போகிறே என்னாலே
செத்துக் கிடக்கிறேன் உன்னாலே