படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, April 03, 2006

கொசுறுகள்

ஜெனிவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், போதை மருந்து முதலான பழக்கப்பற்று (addiction)களுக்குச் சிகிச்சையளிக்கும் வழிமுறையொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றனர். இது மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், வருங்காலத்தில் மருந்து நிறுவனங்கள் மனது வைத்தால் பலர் இப்பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வாய்ப்புள்ளது.
செய்திக்கான சுட்டி

இலங்கையில் இரண்டு 'அரசாங்கங்கள்' நடைபெற்று வருவது அறிந்த ஒன்று. கால நேரமும் அவ்வாறே இரண்டாக உள்ளதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். புலிகளின் பகுதியில் இந்திய நேரத்தைப் போலவே ஜிஎம்டி+5.30ம், தெற்கில் ஜிஎம்டி+6 மணி நேரமாகவும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் அரை மணி நேரத்தைக் குறைத்துக் கொண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தைக் கொண்டுவரும் போலுள்ளது. இதேபோல எல்லாவற்றிலும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி.
செய்திக்கான சுட்டி

உலாவியைத் திறந்ததும் கூகுள் கொண்டுவந்து கொட்டிய செய்திகளில் கவனத்தை ஈர்த்தது: உடற்பருமன் காரணமாக அமெரிக்காவில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் 'காரில்' அமர இயலாமல் சிரமமுறுகின்றனர். இப்போது கடைகளில் கிடைக்கும் இருக்கைகள் அக்குழந்தைகளுக்குப் பொருந்தாமல் போவதால் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இக்கு(risk) அதிகம் என்றும் தெரிவிக்கிறது. ஏழ்மையில் இருப்போர்கள் விலை மலிவான கொழுப்புத் தன்மையுடைய தீனிகளைத் தொடர்ந்து நொறுக்குவதால் வந்த விளைவும் இந்நோய்க்கு ஒரு காரணம் என்று படித்த நினைவு. பெரியவர்களுக்கு ஏற்படுவதைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் குழந்தைகளுக்கு? மரபுவழியாகத் தொடர்கிறதோ?