படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, November 22, 2005

எம்.எம்.எஸ்-ஸில் பயணச் சீட்டு!

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பயணச் சீட்டுகளை எம்.எம்.எஸ் மூலமாகப் பெறும் வசதியினை ஸ்விஸ் ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒருமுறை தங்களது எம்.எம்.எஸ் கொண்ட செல்பேசி, செல்லுபடியாகும் கடனட்டை போன்ற விவரங்களை ரயில் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணிற்கு (இதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு) அழைத்துச் சொன்னால் வேண்டிய பயணச் சீட்டு செல்பேசிக்கு எம்.எம்.எஸ் செய்தியாக அனுப்பப்பட்டுவிடும். அதில் வரும் இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள விசேட உணரி மூலம் சரிபார்த்துக் கொள்வர். பயணச் சீட்டிற்கான தொகை கடனட்டை மூலம் வசூலித்துக் கொள்ளப்படும். ஆரம்ப கட்டமாக 780 ரயில் இணைப்புகளுக்கு இவ்வசதி வழங்கப்படும் என்கிறார்கள். நவீனத் தொலை நுட்பியலைக் கொண்டு மற்றுமொரு சேவை!

[எம்.எம்.எஸ் - செல்பேசிகளின் வழியாகப் பல்லூடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நுட்பியல். இதன் மூலமாக உரைச் செய்தி, படங்கள், ஒலி, ஒளி முதலானவைகளை அதனை ஆதரிக்கும் செல்பேசிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.]

ரிப்பன் கட்டிடம்

கட்டிடம் மட்டும்தான் பார்க்க நன்றாக உள்ளது. மற்றவை பரிதாபம்!

Sunday, November 20, 2005

ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?

பின்வரும் செய்திக்கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் வந்துள்ளது:

பல பொதுத்துறை நிறுவனங்களின் பித்தலாட்டங்களை புட்டுபுட்டு வைத்து, பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் முகங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிய, தணிக்கைத் துறை அதிகாரிகள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் வேலைக்கே வேட்டு வைக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது என்பதுதான் காரணம்.

‘இனிமேல் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தணிக்கையை தனியார்கள் மூலமே முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வரவிருக்கும் சட்டம்.

‘‘ஊழலுக்குத் துணைபோகும் இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. இது நிறைவேறினால் மத்திய & மாநில அரசுகளில் நடைபெறும் ஊழல்கள் இனி வெளியே தெரியாமலே போய் விடும். இப்படியரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து ஊழலுக்குத் துணைபோகத் துடிக்கும் இந்த ஆட்சியை பதவியிலிருந்து இறக்கு வோம்...’’ என்று அதிரடி முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.யும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ரூப்சந்த் பால். இவர்தான் மத்திய & மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார்.

ரூப்சந்த் பால் தலைமையில் அணிதிரண்டிருக்கும் தணிக்கைத் துறை அதிகாரிகள், வரவிருக்கும் புதிய சட்டத்தினால் ஏற்படும் கேடுகளை பொது மக்களுக்கு விளக்கும் வேலையில் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். அந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘அகில இந்திய வணிக தணிக்கை அதிகாரிகள் சங்க’த்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். நம்மிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

‘‘இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாக 1,230 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தணிக்கை செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாடு முழுவதும் 900 தணிக்கை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவ்வளவு அதிகமாகப் பணம் புழங்கும் இடத்தில் அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள்தான் தணிக்கை செய்ய வேண்டும். ‘இந்த அதிகாரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தக் கூடாது. அது சுதந்திரமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் தணிக்கை முறை, வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக இருக்கும்’ என அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கம்பெனி சட்டத்தின் 619 பிரிவை ஏற்படுத்தினார்.

இப்போது இந்த சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலாக புதிய கம்பெனி சட்டத்தை அறிவிக்கப்போகிறது. இந்த புதிய சட்டப்படி பார்த்தால் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் எந்த ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தையும் தங்கள் கணக்குகளை சரிபார்க்க அமர்த்திக் கொள்ளலாம். இதன்மூலம் இதுவரை இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பொருளாதாரத்தின் கண்காணிப்பாளர்களாக வலம்வந்த நாங்கள், வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் வெளியில் தெரியாமலே போய்விடும்.

இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களையெல்லாம் கண்டுபிடித்தது எங்கள் கண்கள்தான். சுர்ஹித் லாட்டரி ஊழல், பீகாரைக் கலக்கிக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல், போஃபர்ஸ் ஊழல், யூரியா ஊழல், பழைய வீராணம் ஊழல், டான்ஸி நில விற்பனை முறைகேடு, கலர் டி.வி. ஊழல் என எல்லாவற்றையும் கண்டுபிடித்தது நாங்கள்தான்.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும். சரியாகச் சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.

தனியார் தணிக்கை முறையில் என்னென்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். அண்மையில் மூடப்பட்ட ‘குளோபல் டிரஸ்ட் வங்கி’ தான் அதற்கு சரியான உதாரணம். இந்த வங்கியின் 2003-04ம் ஆண்டுக்கான தணிக்கையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த வங்கியாக, பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் வங்கியாக குளோபல் டிரஸ்ட் வங்கியை வர்ணித்திருந்தது. ஆனால், அடுத்த வருடத்திலேயே வங்கியின் நிதி நிலைமை படுபாதாளத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் அரசியல்வாதிகளின் துணையோடு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகள் இனி சுலபமாக வாங்கி விட முடியும். எப்படியென்றால் தனியார் முதலாளிகள் கண் வைக்கும் பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தணிக்கை செய்து அதையே காரணமாகக் காட்டி நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கும். இடதுசாரிகள் எவ்வளவுதான் கத்தினாலும் விற்கத் துணிபவர்கள் தணிக்கை அறிக்கையை காரணம் காட்டிப் பேசுவார்கள் என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்கள்.

பிறகு, எல்லாம் போகட்டும், எங்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிபோட முடியவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நேர்மையற்ற முறையில் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும். இதற்காக முறை கேடாக செலவிடப்படும் தொகைக்கு கணக்கு வழக்கு இருக்காது. காரணம் அவையெல்லாம் தனியார் பணம். ஆனால், இந்திய பிரஜைகளின் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அப்படியொரு குறுக்கு வழிகளில் பயணம் செய்ய எங்கள் தணிக்கைத்துறை அனுமதிக்காது. காரணம் இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டின் இமேஜும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறோம்... ஈரானி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இப்படியரு முடிவு எடுப்பதாக அறிவிக்கிறார்கள். ஈரானி என்பவர் யார் என்றால் மத்திய அரசுக்குச் சொந்தமான வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முறைகேடாக வாங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் என்று எங்களால் விமரிசிக்கப்பட்டவர்.

உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதை பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்’’ என்று கொதித்து முடித்தார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர் மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன். இவர் ‘பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்ற கமிட்டி’ யின் தலைவராகவும் இருந்தவர். ‘‘ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவிருக்கும் மோசமான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய புனிதப் பணியை செய்ய வேண்டிய வேளை இது’’ என்று தனது பிரசாரத்தைத் துவக்கி இருக்கிறார் செழியன்.

Wednesday, November 16, 2005

2006 உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்விஸ்

போன வார சனிக்கிழமை ராத்திரி சுமார் 8.30 மணி வாக்குல சும்மா ஒரே ஒரு விநாடிக்கு ஓர் அதிர்வு. முந்தின வருஷமும் ஒரு தடவ ராத்திரியில லேசா வீடே ஆடுச்சு, இந்தத் தடவை அவ்வளவுக்காத் தெரியல. இப்பெல்லாம் அடிக்கடி பூமிக்கடியில ஏதோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த ஆட்டம் முடிஞ்ச பின்னால அன்னைக்கு பெர்ன்-ல நடந்த ஸ்விஸ்-துருக்கி கால்பந்தாட்டத்தை தொ.காவுல பார்த்து முடிச்சப்போ, முதல் ஆட்டத்தைப் பத்தின பயம் கொஞ்சம் மறந்து போயிருந்தது. ஸ்விஸ் ஆளுக நல்லாவே ஆடி ஜெயிச்சிருந்தாங்க. அரங்கத்துல ஒரே கொண்டாட்டமா இருந்தது. அங்கயும் நிலம் ஆடுச்சான்னு தெரியல, இவங்க ஆட்டத்துல ஒரு வேள நிலம் அடங்கியிருந்துச்சோ என்னவோ! :)

அன்னைக்கு ஆடுனது முக்கியமானதுன்னாலும், இன்னைக்கு நடந்த போட்டிதான் இந்த ரெண்டு பேர்ல யாருக்கு அடுத்த வருஷம் ஜெர்மனியில போய் ஆடுற வாய்ப்பு இருக்குங்கறதத் தீர்மானிக்கறது. வழக்கமா போட்டி ஆரம்பிக்கற நேரத்துல தொ.காவப் போட்டுக்கலான்னு விட்டுட்டு அப்புறம் வந்து போட்டா, ஒரு மணி நேரம் ஆட்டமே முடிஞ்சிருந்தது :( இஸ்தான்புல்லுல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலயே ஆரம்பிச்சுட்டாங்கங்கறது அப்பத்தான் பட்டது. திரையில முதல்ல பாத்தது ஸ்கோர் பட்டிதான், பகீர்னுதான் இருந்தது (ஏற்கனவே இன்னைக்கு இந்தியா தோத்துப்போனதக் கேட்ட சோகம் வேற, அதுகூட இதுவும் சேந்துக்கிச்சு). துருக்கி 3, ஸ்விஸ் 1 - ன்னு இருந்தது. இன்னும் இருக்கற முப்பது நிமிஷத்துல ஏதாவது அதிசயம் நடக்கப் போகுதான்னு பாத்துக்கிட்டு இருக்கறப்போ, முடியறதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னால ஸ்விஸ் அணிக்காரங்க இன்னொரு கோலைப் போட்டுட்டாங்க, அரங்கத்துல ஈ ஆடல. அப்புறம் கடைசி நிமிஷத்துல துருக்கியும் ஒன்னைப் போட்டு 4-2க்கு கொண்டு வந்துடாங்க. இருந்தாலும் அவங்களுக்கு பழைய பந்தயங்களோட கணக்குப்படி இந்தப் போட்டில 3-0 ன்னு ஜெயிச்சாத்தான் மேல போகமுடியும். ஆனா தோத்தாலும் (ஆனா இவ்வளவு நாளா தொடர் முழுசும் நல்லாவே கஷ்டப்பட்டுத்தான்) ஸ்விஸ் பசங்க உலகக் கோப்பைல ஆடறதுக்கு முன்னேறிருக்காங்க. இந்த வாட்டி உலகக்கோப்பைல ஆடப் போறது அவங்களுக்கு எட்டாவது தடவையாம். ஜெயிக்கறாங்களோ இல்லையோ அதுக்குள்ள நுழையறதே பெரிய விஷயம்தான். வாழ்த்தறோம்!

Monday, November 14, 2005

சிறை-விவசாயி

என்னய்யா நடக்கிறது நாட்டில்?! ஆயிரம் பேர் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தங்களுக்கு வேண்டியவர்களை 'விடுவித்துச்' செல்வதென்பதை என்னவென்று சொல்வது? தாக்குதல் திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதுபோன்றவைகளைக் காட்டும் சினிமாக்கள் தோற்றுவிடவேண்டும் போலுள்ளது. உளவு அமைப்புகள் என்பதே அங்கு இல்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? பிகார் போன்ற சில மாநிலங்களில் மக்களை வளரவிடாமல் தடுக்கும் சமூக நோய் ஆழப் பரவியுள்ளது. அவைகளுக்குத் தீர்வு காணும் வரையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.

திறந்து கிடந்த சிறைக்குள்ளிருந்து தப்பிச் செல்ல விரும்பாமல் அங்கேயே சிலரும், தாக்குதலின் போது உயிர் பிழைக்கத் தப்பி விட்டு மீண்டும் சிறைக்கே வந்தோரும் இருக்கிறார்களாம். இதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

-----------

ஒரு விவசாயிதான் விவசாய நிலத்தை வாங்க வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமுள்ளதாம், இன்றுதான் கேள்விப்படுகிறேன். "அமிதாப்பச்சன், நீங்கள் நடிகரா, விவசாயியா? முதலில் தெளிவுபடுத்துங்கள்". பாவம் அமிதாப், இப்படியெல்லாம் கஷ்டமான கேள்வியைக் கேட்கலாமா? ஒருவர் தான் செய்யும் தொழிலை நிரூபிக்கச் சான்றிதழைக் கூடப் பெறலாமோ! ஒன்னும் தெரியமாட்டேங்குது போங்க :(

Tuesday, November 08, 2005

வெண் பாஸ்பரஸ்

தானாக எரியக்கூடிய வேதிப் பொருள் - போர்களங்களில் ஒளியை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும்.
உடம்பில் பட்டால் தோலும் சதையும் எரிந்து விடும்.
இப்படிப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்ட ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் பெரியண்ணன் கையெழுத்திடவில்லை.

ஆகவே, அதை உபயோகப்படுத்தாமல் விடுவானேன். யார் எரிந்தாலென்ன, செத்தாலென்ன, யார் கேட்பது? முடிந்த வரை அழித்து விட்டு, அழித்ததற்கான தடயங்களையும் அழித்துவிட்டால் அப்புறம் அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm