படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, July 31, 2005

சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு

இந்தியாவில் சில்லரை விற்பனையில் (retail business) பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதிக்கும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளதை செய்திகளில் அடிக்கடி காண்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் (10,000 சதுர அடித் தளம், ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கடை போன்றவை) மாறுகடையை (market) இவர்களுக்குத் திறந்து விடப்பட்டாலும், காலப்போக்கில் இவ்விதிமுறைகள் தளர்த்தப்படும் அல்லது காற்றில் விடப்படும். இப்படியொரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தால் வழக்கம்போல நமது 'மாண்புமிகு' உறுப்பினர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு நிறைவேற்றி விடுவார்கள். அப்புறம் நடைமுறைக்கு வந்தபின்தான் அதிலுள்ள சிக்கல்கள் தெரிந்து 'போராட' ஆரம்பிப்பார்கள் ('போட்டா' சட்டம் ஓர் உதாரணம்).

சில்லரைப் பெரு வியாபாரத்தில் ஈடுபடுள்ள உள்நாட்டு ஜாம்பவான்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறதென்பதைப் பார்க்கவேண்டும். மாறுகடையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஏதோ சில நன்மைகள் இருந்தாலும், பலதரப்பு மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது எனது பொத்தாம்பொதுவான எண்ணம்.

Thursday, July 21, 2005

BMW-ம் வந்துவிட்டது!

செங்கற்பட்டில் BMW கார் தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகச் செய்தி. புதிய மாறுகடைகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெருநிறுவனங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கின்றன. கேட்க நன்றாக இருந்தாலும், சாலை வசதி மேம்பாட்டிலும், சாலை விதிகளை மதித்துப் பின்பற்றுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படாத வரை எந்த புதுக் கார் வந்து என்னவாகிவிடப் போகிறது என்ற ஆதங்கமும் எழுகிறது.

வரும் நாட்களில் "BMW இங்கு வர நான்/நாங்கள் தான் காரணம்" என்று சில குரல்களைக் கேட்கலாம்! எங்கோ அடுத்த சாலையில் வரும் மளிகைக் கடைக்கும் நான் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் சரி!

Wednesday, July 20, 2005

குடமுழா

இந்த வாரத்தில் சிலமுறை தவில் இசைத் துண்டுகளை இணையத்தில் ஆங்காங்கும், இருக்கின்ற ஒலிப்பேழையொன்றிலிருந்தும் காரணமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவில் ஓர் அருமையான இசைக்கருவி. சிறு வயதில், ஊர்விழாக்களின் போது ஒரு நபர் இதைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு அடி பின்னியெடுப்பதைக் கண்டு ஆட்டமும் போட்டுள்ளோம். திருமணம் போன்ற வீட்டு விழாக்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த தவிலுக்கு இப்பொழுதெல்லாம் சரியான மரியாதை கிடைக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. படப்பாடல் நிகழ்ச்சிகளையும், 'பேண்டு' வாத்தியங்களையும் புகுத்தி உள்ளதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்புறம், குடமுழா என்றொரு இசைக்கருவி. இதைப் பஞ்சமுக வாத்தியம் என்றும் சொல்வார்களாம். குடமுழாவைப் பற்றிய அரிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. நூல் அறிமுகக் கட்டுரைக்கான சுட்டி: http://varalaaru.com/Default.asp?articleid=162. அக்கட்டுரையில் இருக்கும் ஆடவல்லாரின் சிற்பப் படம் ஏதோ பரவசத்தை ஏற்படுத்தியது.

Sunday, July 17, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!! - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...

"இனி கூட்டிக் கழித்துப் பார்த்தால், இப்பொழுது உயிர் எழுத்துக்கள் அ,இ,உ,எ,ஒ என்று ஐந்தாகிவிட்டதல்லவா? ஆங்கிலத்தில் aeiou எனும் ஐந்து உயிரெழுத்துக்கள் ஆனதைப்போல. இவ்வாறான மாற்றங்களால் நம்மொழி அடைந்த நன்மை என்ன?

1. மொழியின் வரிவடிவம் அமைப்பின் சுருக்கம்.
2. மொழியின் வரிவடிவில் தெளிவு.
3. கற்போருக்கு (சிறுவர், பிறமொழியாளர்) இலகு.
4. நவீனத்துக்கு ஈடு.
5. பிறமொழிகளுடன் ஒப்பிட ஏது.

இவ்வாறே மெய்யெழுத்துக்களில், ண்,ந்,ன் ஆகியனவற்றையும் ல்,ழ்,ள் ஆகியனவற்றையும் ஒரே வரிவடிவில் குறிக்க முடிவது பற்றி உத்தேசித்தால் என்ன?

இவைகுறித்தெல்லாம் நான் சொல்வதிலும் பார்க்க பேரா.எம்.ஏ.நுஃமான் என்ன சொல்கின்றார் என்று அறியவைப்பது கருத்தை உங்களுக்குள் செலுத்த இலகு அல்லவா?

இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழு உலகையும் தழுவி விரிந்து நிற்கின்றது. மறு வகையில் முழு உலகமும் சுருங்கி தமிழ் கூறும் நல் உலகக்குடிமகன் ஒருவனின் தனி அறைக்குள் இன்று internet ஊடாக நுழைந்துவிட்டது. அதற்கேற்ப தமிழ்மொழியும் தன்னை விசாலப்படுத்தி தன் ஆற்றலை அகலித்துக் கொள்ள முனைகின்றது. இன்று தமிழ் பல்தேசிய மோழி என்பதனையும் பல்லினப்பண்பாட்டு மொழி என்பதனையும் நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். மொழி மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழின் ஒலி மரபும் மொழிமரபும் நெகிழ்ச்சியடைந்து புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மரபுகள் தோன்றிவிட்டன.... (பேரா எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு 19)

காலத்திற்கேற்ற கோலம் நம் தமிழ்மொழி கொள்ளாவிடில், அழிவதைத்தவிர வேறு வழிஇல்லை. ஆகும் வழியையே நாம் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் அத்தகைய மாற்றத்தை அது பெறுவதனை நாம் காண்கின்றோம். ph என்னும் வரிவடிவங்கள் f என்னும் ஒலிவடிவத்தை தந்து நிற்பதால் இப்போதெல்லாம் ph இதற்குப் பதிலாக f பயன்படுத்துகிறார்கள். இரண்டு வரிவடிவங்களுக்குப் பதிலாக ஒரு வடிவம்.

Photo - Foto

அவ்வாறே ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கக் கண்டபோது தேவையற்ற வரிவடிவங்கைள நீக்குகின்றார்கள்.

Night - Nite
Colour - Color

மேலும் ஒலி வடிவம் கருதி வரிவடிவம் சுருங்கிக் கொண்டு போவதும் ஆங்கிலத்தில் நிகழ்கின்றது. 1982 வாக்கில் தெல்லிப்பழைச் சந்தி வெள்ளவாய்க்கால் மதகில் ஒரு சுவரொட்டியைக் கண்டேன். மதில் ஆங்கிலத்தில் இவ்வாறு வாசகம் இருந்தது.

JR, UR a facist
VR not foolish
go back.
(ஜே.ஆர். என்னும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்தபோது இச்சுவரொட்டி காணப்பட்டது).

UR (you are), VR (we are) என்று வந்தவிதம் தமிழிலும் சாத்தியப்படுமெனில், நன்று, மிகநன்று.

உலக மொழிகள் யாவும் இவ்வாறு மாற்றத்தை அவாவி நிற்கின்றது. அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. புதியன புகுத்தி தமிழை நாம் வாழவைப்போம், வளர வைப்போம். செய்வோமா?"

Saturday, July 16, 2005

உயிரெழுத்துக்கள் ஐந்து!!

ஈழமுரசு ஐரோப்பா என்ற வார இதழில் அ.இரவி என்பவர் எழுதிய 'புதியன புகுதல்' என்னும் கட்டுரை நான்கு பாகங்களாக வந்துவிட்டிருக்கிறது. அதன் கடைசி பாகம் மட்டும் இந்த வாரம் வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்வி இருந்தாலும் புதியவற்றை அறிதலும், எண்ணுதலும் நலமே. அக்கட்டுரையின் நான்காம் பாகம் பின்வருமாறு [பதிப்புரிமை பற்றி அவ்விதழில் எங்கும் காணோம்; அக்கட்டுரையை இங்கு பதிப்பதால் பதிப்புரிமைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படியேதும் உண்டென அறிய வரும்பட்சத்தில் இக்கட்டுரை பதிவிலிருந்து நீக்கப்படும். இங்கு எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அது தட்டச்சின்போதும் நேர்திருக்கலாம்.] :

"தமிழில் முதல் ஒலி வடிவங்கள் அல்லது மூலஒலிவடிவங்கள் முப்பது என்று சொன்னோமே! அவற்றுள் ஸ்,ஷ்,ஹ் ஆகியன வரவில்லை என்றெல்லாம் சொன்னோமே! என்ன சொன்னோமெனில் அவ்வாறான ஒலி வடிவங்களுக்கு தமிழில் வரிவடிவங்கள் கிடையாது என்று சொன்னோம்.

என்னவென்றால் ஊரில் உலகில் இருக்கக்கூடிய எல்லா ஒலிவடிவங்களுக்கும் எல்லா மொழிகளிலும் வரிவடிவங்கள் இல்லை. அதற்கு சாத்தியமும் கிடையாது. தமிழில் ஞ், ழ் என்னும் ஒலிவடிவங்களுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இல்லை. ஞானம்-Gnanam, அதாவது ஞ் என்பதற்கு Gn என்பதையே பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் பொருத்தமானது அல்ல. தமிழ்-Thamizh, இங்கு ழ் என்பதற்கு zh என்னும் ஆங்கில வரிவடிவம் பயன்படுகிறது. இதன் பொருத்தப்பாடும் கேள்விக்குரியது.

அவ்வாறே ஆங்கில F,G,H,X,Z என்று இன்னும் பல ஒலிவடிவங்களுக்கு தமிழில் வரிவடிவம் இல்லை. எப்படியோ திக்குமுக்காடி Father என்பதனை ஃபாதர் என்று எழுதிவிடுகின்றோம். இப்போது ஒன்றுக்கும் உதவாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஆய்த எழுத்துக்கு (ஃ) ஒரு சொல்லில் இடம் பெறும் குதூகலம் வாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் இவை எவையும் மொழியின் போதாமை அல்ல. எல்லா மொழிகளும், பிறிதான மொழிகளிடமிருந்து இரவல் பெற்றும், கொடுத்தும், இயலுமானளவு தம்மை நிறைவு செய்து கொள்கின்றன. உலகுடன் ஒட்ட ஒழுகலும் உலகின் இன்றைய தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், நம் தமிழ்மொழியை எவ்வாறு வாலாயப்படுத்தப் போகின்றோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.

தமிழில் முதல் ஒலி வடிவங்கள் முப்பது என்றோமே! அதில் உயிர் எழுத்துகள் 12 உம் மெய்யெழுத்துக்கள் 18 உம் ஆகும் என்பதனை முதலில் குறித்துக் கொள்ளல் சாலும். ஒலிவடிவத்தின் உயிராக நிற்பது உயிர் எழுத்துக்கள் என்றும், உயிர் தங்குவதற்கு ஏதான உடலாக நிற்பது மெய்யெழுத்துக்கள் என்றும் சொல்லலாம். அந்த வகைப்பாடுகள் அற்புதம் என்பேன். ஆனால் வரிவடிவங்களை அளவுக்கதிகமாக இறைத்துவிட்டோமோ என்னும் ஐமிச்சம் தான் என்னிடையே தோன்றுகின்றது. உயிர் எழுத்துக்கள் எவை?

அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ

ஒ-ஓ
ஒள

இவைதாமே! இப்படித் தொகுத்தலுக்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் பார்வையில் இடப்பக்கம் உள்ள ஐந்து உயிர் எழுத்துக்களும் (அ,இ,உ,எ,ஒ) போதும் என்பேன். ஏனைய ஏழு உயிர்களையும் கழித்து அழுத்துவிடலாம் என்றும் சொல்வேன். ஏன் சொல்கின்றேன்?

அ,ஆ இரண்டையும் எடுங்கள். இரண்டும் ஒரே ஒலிவடிவங்களாலானவை. ஓம்தானே? உச்சரித்துப் பாருங்கள், உணர்வீர்கள். சிறு வித்தியாசம் என்னவெனில், அ என்பது குறுகியும் ஆ என்பது நீண்டும் ஒலிக்கின்றது. ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கின்ற போது இரண்டு வரிவடிவங்களை இதற்கு ஏன் இடவேண்டும்? நீட்சியான ஒலிவடிவம் வேண்டுமென்றால் எங்களிடம் ஏலவே உள்ள (ா) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம்தானே? எப்படி? இதோ பாருங்கள் இப்படி!

அ-அா
இ-இா
உ-உா
எ-எா
ஒ-ஒா

சரி, ஐ உம் ஒள உம் அப்படியே இருக்கட்டும். பிறகு வருகின்றேன்.

உயிர் எழுத்துக்களுக்கு மேற்கூறிய வரிவடிவங்களைக் கையாண்டோமானால், உயிர் எழுத்துக்களின் வரிவடிவங்களின் அளவைக் குறைத்துக் கொள்வோம் அல்லவா? இது தவறு, மரபை மீறுதல் தகாது என்று சொல்வோருக்கு, நான் என்ன சொல்ல? பவணந்தி முனிவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சொன்னதைச் சொல்லவா?

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவா, கால வகையினானே

மொழியின் வரிவடிவங்களைக் குறைத்துச் செல்லல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்தில் கணனிப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் மொழிக்கு மேலும் வலுவூட்டும். ஆகவே நாங்கள் இனி இப்படி எழுதுவோமா? அல்லது எல்லோரையும் எழுதச் சொல்லிக் கேட்போமா?

அாடு (ஆடு), கிாரி (கீரி), உார் (ஊர்), ஒாடம் (ஓடம்)

உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள என்னும் ஒலி, வரிவடிவங்கள் இரண்டு உள்ளன. இவற்றை எப்படி மாற்றமுறச் செய்யலாம்? ஐ என்பது அ உம் இ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் ஒள என்பது அ உம் உ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. அது சொல்லட்டும். தமிழில் ஏலவே ஐ ஒலிவடிவத்திற்கும் வரிவடிவங்கள் உள்ளன.

ஐ - அய்
ஒள - அவ்

இவை மெத்தப் பொருந்திப் போகிறதல்லவா?

ஐயர் - அய்யர்
ஒளவை - அவ்வை

மேற்கூறிய உதாரணத்தில் ஒலிவடிவத்தைப் பார்த்தீர்களா? அவை அச்சொட்டாகப் பொருந்திப்போகிறது. சங்ககாலப்பாடல் ஒன்றினை மேலும் நான் உதாரணத்திற்குத் தருவேன்.

கையது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

(போரிலிருந்து வெற்றி பெற்று திரும்பிய தொண்டைமானைப் பார்த்து அவ்வை பாடியது. கையில் வேல், காலில் புனையப்பட்ட கழல் என்னும் ஆபரணம், உடல் முழுவதும் வியர்வை, தொண்டையில் புண்)

இங்கு கையது, மெய்யது என்ற சொற்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது மனைவதைக் காண்க. அதாவது முதலாவது வரியில் வரும் முதலெழுத்து கை என்பது நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும், முதலெழுத்து மெ என்பது குறிலாகவும் அமைகிறது. இது யாப்புக்கு முரண். இரண்டும் நெடிலாக அமைய வேண்டும். ஆகவே இப்படி எழுதிப் பார்ப்போமா?

கய்யது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்

இப்பொழுது இரண்டு வரிகளினதும் முதலெழுத்துக்கள் (க, மெ) குறிலாக அமைந்து, யாப்பிலக்கணத்தை நிறைவு செய்கின்றதல்லவா?"

(மீதி அடுத்த பதிவில்)

Thursday, July 14, 2005

பிரிவென்பது...

யாருக்கும் மன வருத்தமளிக்கும் நிகழ்வு. மகள் செல்லும் குழந்தைகள் காப்பகத்தில் (creche) பணிபுரிந்த இரண்டு பேருக்கும், கோடைவிடுமுறை முடிந்த பின்னால் பள்ளிக்குச் செல்லும் வயதெய்திய சில குழந்தைகளுக்கும் இன்று வழியனுப்பு விழா நடந்தது. வழக்கத்திற்கு மாறாக, மாலை 6 மணிக்கு மேல் அங்கு வந்து தங்களுடைய நண்பன்/நண்பிகளை அவர்களது பெற்றோருடன் இருக்கக்கண்டு, அவர்களுடன் விளையாடி, செல்லுமுன் அன்பளிப்புகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு, உண்டு களித்துச் சென்றது அக்குழந்தைகளுக்கு நல்ல பொழுதாக அமைந்திருக்கும். பிரிவென்பது அவர்களுக்குப் புதிதா என்ன? இச்சிறு வயதில் பெற்றோரின் பிரிவைத்தான் தினமும் காலையில் சந்திப்பவர்களாயிற்றே!

சில வருடங்கள் அங்கு பணியாற்றிவிட்டு விடைபெறும் நண்பர்கள் இருவருக்கும் இந்நாள் கடினமானதொன்று. வெயில் மின்னும் மாலையில், பெற்றோர், குழந்தைகள் அனைவரும் வட்டமாக நிற்க, சக பணியாளர் ஒருவர் நன்றி தெரிவித்து உரை வாசித்து முடித்த போது விடைபெற்றுச் செல்வோரின் கண்களில் நீர் கசிகிறது. சுற்றி நிற்போருக்கும் கனத்த பொழுது அது. நெகிழ்வுணர்வுக்கு இடமேது நாடேது! அவர்களுடனான எங்களுடைய பழக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம்தான் என்றாலும், மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. மனதார வரும் துயரம், மகிழ்ச்சி முதலான உணர்வுகள் ஒருசில நிமிடங்கள்தான் இருக்கிறதென்றாலும் அவற்றின் அனுபவத்தை நினைத்தே மற்ற காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

Monday, July 11, 2005

இது எப்படி இருக்கு?

இன்று வந்த மின்னஞ்சல் ஒன்றில்...

Image hosted by Photobucket.com

" வடோதரா, குஜராத்தில் சமீபத்தைய மழை வெள்ளத்தின் போது நிகழ்ந்த காட்சி! இணை ஆணையர் (கே.குமாரசுவாமி?), தன் கால்களும், கால்சட்டையும் நனையாமல் இருக்க காவலர் ஒருவரின் தோளில் அமர்ந்து செல்கிறார்!!

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 2"

Friday, July 01, 2005

தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்

இந்த வார வலைப்பதிவுகளில் தமிழ்ப் புத்தகத் தகவல் மையம் அமைப்பது பற்றிய எண்ணங்களையும், முயற்சிகளையும் பற்றி வாசித்திருப்பீர்கள். அதற்காக வெங்கட், விக்கி ஒன்றைத் துவக்கியதைப் பற்றியும் அறிவீர்கள் (அவ்விக்கியின் முகவரி: http://abbe.optics.utoronto.ca/tamilbooks/).

ஆர்வமிருப்போர் தேவையான தகவல்களை அதில் இடத் துவங்கினால் நன்றாக இருக்கும். என் சார்பில், முதல் கட்டமாக என்னிடமிருக்கும் தமிழகப் பதிப்பாளர்களின் முகவரிகளை இடலாமென்றுள்ளேன். தற்சமயம், பதிப்பாளர்களின் பெயர்களை மட்டும் மேற்குறிப்பிட்ட விக்கியின் இணையப்பக்கத்தில் "பதிப்பாளர்கள்" என்ற சுட்டியின்கீழ் காணமுடியும்.

ஒவ்வொரு பதிப்பாளரின் முகவரி விவரங்களை வேறொரு பக்கத்தில் இடவேண்டும். ஏற்கனவே இடப்பட்டிருந்த ஒரு முகவரிப் பக்கத்தின் தகவல்களைச் சற்று மேம்படுத்திப் பின்வரும் வடிவத்தை யோசித்து வைத்துள்ளேன்:


அன்பு பதிப்பகம்

தொடர்பு கொள்ள

பழைய எண் 63அ, புது எண் 4அ
டாக்டர் அரங்காச்சாரி சாலை
சென்னை-600018

தொலைபேசி:
தொலைநகல்:
மின்னஞ்சல்:
இணைய தளம்:

வெளியீடுகள்


மேலதிகத் தகவல்கள்



இதில் 'வெளியீடுகள்' சுட்டியைச் சொடுக்கினால் அப்பதிப்பகத்தின் புத்தகப் பட்டியலைக் காணும்பொருட்டு வேறொரு பக்கத்தில் அவற்றை உள்ளிடலாம் (தகவல், ஆர்வம் உள்ளோர் அனைவரும்). பிறகு அங்குள்ள ஒவ்வொரு புத்தகத் தலைப்பின் சுட்டிக்கும் வேறொரு பக்கத்திலுள்ள அப்புத்தகத்தின் விவரங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தலாம்.

இப்போதைக்கு மேற்கண்ட உதாரண முகவரிப் பக்கத்தின் வடிவைக் குறித்த உங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். (பதிப்பாளர்களின் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்கள் என்னிடமில்லை; இருப்பினும் வருங்காலத்தில் தெரியவரும்போது சேர்த்துக் கொள்ளலாம்).

தமிழ்ப் புத்தகத் தகவல் மையத்திற்கான விக்கி 'குடிசை'யைக் கட்ட ஒரு சிறு குச்சியை எடுத்துப் போடுகிறேன். நீங்களும் வாருங்கள், கட்டுவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்:
தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் - விக்கியும் மேலும்
தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்
புத்தகப் பட்டியல் தரவுதளம்
இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்
நேற்று, இன்று , நாளை