படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, February 23, 2005

ஒள

"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்லு.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமைமகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.

நன்றி: கழகத் தமிழ் அகராதி

மேற்கண்ட சில வார்த்தைகளை வாசித்தும் வந்த எதிர்வினை:
ஐ!
ஓ!
ம்.

Monday, February 21, 2005

படிக்காட்டியும் பரவாயில்லை, வாங்குங்க!

அறிவு, திறமை, ஆர்வம் அனைத்தும் இருந்தும் பொருள் வளம் இல்லாதிருப்பது துரதிஷ்டமான ஒன்று. நல்ல நோக்கத்திற்குப் பொருளுதவி கிடைப்பதும் அரிதான காரியமாகவே இருக்கிறது. வரலாறு மின்னிதழின் பிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 பதிப்பில் வந்துள்ள செய்தியொன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புத்தகம் எழுதுவதென்பது, அதுவும் ஆய்வுக் கட்டுரைகளுடன், அனைவராலும் செய்துவிடக்கூடிய சாதாரண காரியமல்ல. அப்படி எழுதியும் அதை எளிதில் வெளியிடச் செய்யமுடியாத நிலை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டுவர எவ்வளவு சிரமப்படவேண்டியுள்ளது! "பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் இரா.கலைக்கோவனின் வார்த்தைகள்:

"...ஏராளமான ஆய்வுகள் செய்து வைத்திருக்கிறோம். வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை.......
ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால் ஐந்து பேர்கள் என்றாலும் ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். ஒரு புத்தகம் கொண்டுவர முடியும். ஆண்டுக்கு இரண்டு நூல்கள் கொண்டு வரலாம். இரண்டாண்டுகளுக்கு அப்படிக் கொண்டு வந்தால் பிறகு நூலகங்கள் வாங்குகின்ற அந்த பதிப்பகத் தொகை கொண்டே தொடர்ந்து நூல்கள் வெளியிட வாய்ப்பாக இருக்குமென்று சொன்னேன்.

உடனே ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்த நண்பர்கள் இராமசந்திரன், கோகுல், கமலக்கண்ணன், செல்வி இலாவண்யா. இந்த ஐந்துபேரும் சென்ற ஜூன் மாதத்திலிருந்து மாதந்தோறும் அவர்கள் வாங்குகின்ற ஊதியத்திலிருந்து தலைக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேமித்து மேற்கொண்டு ஒரு ஐந்தாயிரமும் கொடுத்து இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே நான் பூரித்துப்போய்ச் சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இப்படி ஒரு குழு அமையுமானால் சரியான வரலாற்றை சரியான தரவுகளோடு எழுதிவிடலாம்.

அறியாத தமிழ்நாட்டு வரலாற்றை எழுத இங்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வெளியிடுவதற்குத்தான் சரியான ஆட்களில்லை."

பொருளிருப்போர் வாசிக்காவிடினும் புத்தகமொன்றை வாங்கி வைத்தும், ஆர்வமிருப்போர் புத்தகத்தை வாங்கிப் படித்தும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கலாம்.

Sunday, February 20, 2005

வனப் பராபத்திய அவை

மரம் மற்றும் சில வனப்பொருட்கள், அவற்றின் விளம்பரங்கள் FSC என்ற குறியைத் தாங்கிவருவதைக் காணலாம் (குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளில்). Forest Stewardship Council (FSC) என்பது வனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு சாரா, பன்னாட்டு அமைப்பு. மரங்கள் விடாமல் வெட்டப்பட்டு உண்டான வனங்களின் அழிவுக்கு ஒருவகையான எதிர்வினை என்று இதைக் கூறலாம். சூழமைக்குத் தகுந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்குத் தோதான வகையில் வனங்களை நிர்வகிக்கும் பொருட்டு 1993-ல் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வனத்திலிருந்து மரம் மற்றும் பிற பொருட்களை எடுக்கும்போது அதன் பல்லுயிர்த் தன்மைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், வன வளத்தைத் தொடர்ந்து பெருக்குவதும், சூழமைச் செயல்பாடுகளைத் தொடரச் செய்வதும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் சமுதாயமும் தொடர்ந்து வருமானம் பெறும் வகையிலும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையைக் கொள்ளையடித்து வெறும் இலாபம் மட்டும் பார்க்காமல் அதைத் தொடர்ந்து பேணிப் பராமரித்தலும், அப்பகுதிவாழ் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வன வளங்களை நிர்வகிப்பதாகும்.

இவ்வமைப்பு உருவாக்கியுள்ள வனச் சான்றிதழ் மற்றும் பொருட் குறியீட்டு முறைமைகள், சரியாக நிர்வகிக்கப்படும் காடுகளிலிருந்து கிடைக்கும் மரம் மற்றும் அவை சார்ந்த பொருட்களைச் சாதாரண நுகர்வோர் நம்பிக்கையுடனும், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலும் உள்ளன. வனங்கள் கடுமையான தரக்கட்டுப்பாடுகளால் (இதற்கான பத்து கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்) சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வனத்திலிருந்து நுகர்வோரைச் சேரும் வரையில் ஒரு பொருளானது ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிக்கப்படுவதால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. மேலும், WWF, Friends of the Earth, Greenpeace மற்றும் Woodland Trust போன்ற பெரும் சூழமை சார்ந்த அமைப்புகள் FSCயை ஆதரிக்கின்றன.

இவ்வமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை http://www.fsc.org/en/ என்ற முகவரியில் அறியலாம்.

(Stewardship என்பதற்கு கொலோன் பல்கலை அகராதி 'பராபத்தியம்' என்ற சொல்லை வழங்குகிறது; வேறு நல்ல சொற்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்; நன்றி!)

Sunday, February 06, 2005

ஆகாயத் தாமரை

"பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு (தாமிரபரணி) இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது. இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்."

மேற்கண்டதை வாசித்தபின்பு அச்செடியைப் எண்ணம் மனதில் சற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆகாயத் தாமரையை (வெங்காயத் தாமரை, ஆம்பல் என்பவையும் அதே செடியைக் குறிப்பனவா என்பதை அறிந்தவர்கள் சொல்லவும்) அதிக அளவில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள எஞ்சி நிற்கும் குளத்திலும், திருச்சி சாலையிலிருக்கும் சிங்காநல்லூர் குளத்திலும் கண்டிருக்கிறேன். நீரின் மீது பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பார்பதற்குப் அழகாக இருக்கும் இத்தாவரம் தானிருக்கும் பகுதி பசுமையால் பூத்துக் குலுங்குவதுபோலத் தோன்றச் செய்யும். அழகான இத்தாமரை அழிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது எவ்வாறு ஆறு, குளம் முதலான நீர்நிலைகளை அழிக்கிறது என்று தெரிந்துகொள்ளத் தலைப்பட்டு கூகிளில் தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன.


ஆகாயத் தாமரையின் அழகில் மயங்கி அதை சென்ற நூற்றாண்டுகளில் அமேசான் படுகையிலிருந்து இறக்குமதி செய்து மக்கள் தம் வாழுமிடத்தைச் சுற்றி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இருக்க இடங்கொடுத்தால் படுக்கப் பாய் கேட்கிறதைப் போல், தனது அசுர வளர் திறனால் அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவிவிட்டது இச்செடி. மனிதன் எதையுமே தனக்குப் பாதகம் என்று வந்தால் தானே அதைப்பற்றி கவலைப்படுவான்!

ஆங்கிலத்தில் Water hyacinth என்றழைக்கப்படும் ஆகாயத் தாமரையின் தாவரவியல் பெயர் Eichhornia crassipes. இதை ஒரு மிதக்கும் நீர்க்களை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் சில பின்வருமாறு:

குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
சாகாவரம் பெற்ற கொசுக்களுக்கு இது ஒரு சொர்க்க பூமிதான்.
வெள்ள காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன்பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. தமிழகத்திலும் அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போன்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும் இது குறித்து ஆய்வுகள் செய்திருக்கக்கூடும். ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுறையில் இருக்கிறதென்று தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு இச்செடிகள் தினமும் வழியில் பார்த்துச் செல்லும் மற்றொரு காட்சியே.



பல்கிப் பெருகிவிட்டன இச்செடிகளை அழிப்பதோ, கட்டுப்படுத்துவதோ சாதாரண காரியங்களாகத் தெரியவில்லை. வேதியல் மற்றும் உயிரியல் வழிமுறைகள் சில இருந்தாலும் நம்மூரில் அதிக அளவில் கிடைக்கும் மனித வளத்தைக் கொண்டு (நிபுணர்களின் வழிகாட்டல், அரசு மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன்) கையால் அழிப்பது பல்வேறு வழிகளில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். மாவட்ட நிர்வாகங்கள் இதை ஒரு தற்காலிக வேலைவாய்ப்பாகக் கூட வேலையற்ற இளைஞர்களுக்கு அளிக்கலாம். அல்லது உணவிற்கு வேலை என்று ஏதோ ஒரு திட்டம் இருக்கிறதென்று சொன்னார்களே அதன் மூலமாகக்கூட முயற்சிக்கலாம்.

இச்செடியால் ஏதேனும் பயனுள்ளதா என்றுகூட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுவதாகத் தெரிகிறது.

சென்ற டிசம்பர் (9-13.12.2004) புவனேஸ்வரில் நடந்த 'Lake 2004' என்ற கருத்தரங்கிலும் ஆகாயத்தாமரை பற்றி விவாதித்துள்ளனர்.

இணையத்தில் ஆகாயத்தாமரையைக் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, அச்செடியைப் போலவே.

செடியைப் பற்றிய பொதுவான தகவல்கள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றிற்கான சுட்டிகள்:
http://www.invasivespecies.gov/profiles/waterhyacinth.shtml
http://www.water-hyacinth.com/
http://www.nrm.qld.gov.au/factsheets/pdf/pest/PP6.pdf
http://www.pbs.org/wgbh/nova/algae/impact.html
http://www.worldfishcenter.org/naga/naga-ntafp%20news.pdf
http://www.issg.org/database/species/ecology.asp?si=70&fr=1&sts=sss

Tuesday, February 01, 2005

சிற்றிதழ்களின் களஞ்சியம்

சுபமங்களா - எனக்கு வாசிக்க கிடைத்த ஆரம்பகால சிற்றிதழ். கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த அருமையான அவ்விதழ் அவரது மறைவுடன் நின்றுவிட்டது. பிற்பாடு, காலாண்டு இதழாக வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அறிமுகம். இதே காலகட்டத்தில் கோவையிலிருந்து வெளியாகும் கலைக்கதிர் என்ற அறிவியல் சிற்றிதழும் வாசிக்கக் கிடைக்கும். இவற்றின் வாயிலாக சமகாலத்தைய இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், வாசிக்கக் கிடைத்ததில்லை. கல்லூரி நூலகத்தில் சில இதழ்கள் புத்தாடை கலையாது மேசையின் மேல் மின்விசிறியின் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கும்.

இலக்கியம் மட்டுமல்லாது, பல்வேறு தளங்களில் எத்தனை சிற்றிதழ்கள் தமிழில் வந்துகொண்டும், வந்து நின்றுபோயும் இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் எல்லாக் காலத்திலும் இதுபோன்று ஏதாவது இதழ்கள் (அது பத்து பேர் மட்டுமே படிக்கும் கையெழுத்துப் பிரதியானாலும் சரி, இல்லை பல நூறு படிகளாக வரும் அச்சுப் பிரதியானலும் சரி) தயாராகிக் கொண்டிருக்கும். கொஞ்ச காலத்திற்கு வெகு அமர்க்களமாக வரும் இவ்விதழ்கள் ஒரு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் காணாமல் போய்விடுவதுடன், அப்படியொன்று வந்ததற்கான சுவடே இல்லாமல் ஆகிவிடும். எதையும் ஆவணப்படுத்தியோ, சேகரித்துப் பாதுகாத்தோ வைத்துவிட்டால் தன் சுயத்தை இழந்து விடமாட்டானா தமிழன்!!

நிலைமை இப்படியிருக்க, "உலக அளவில் கருத்துச் செறிவோடு தொடங்கப்பட்டுத் தொடரப்படுகிற இதழ்கள், அனைவரது பார்வைக்கும் படாமலேயே நின்றுவிடுகின்றன. இவ்வகை இதழ்கள் அந்த இதழாளர் வாழும் வரை அவரோடு வாழ்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்குத் தூக்கி எறியப்படுகின்றன.

தமிழகத்துலும், வெளிநாட்டிலும் இவ்வாறு வெளியிடப்படும் இதழ்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் முதன்மையாகும். இந்த நோக்கில் நமது நூலகத்தில் இன்றுவரை 2,533 வகையான தமிழ்ச் சிற்றிதழ்கள் திரட்டப்பட்டுள்ளன.

இவற்றில் வானம்பாடி, தேனீ, சரஸ்வதி, டமாரம் இதழ்களைக் குறுந்தகடு ஆக்கியுள்ளேன். இந்த முறையில் இதழ்களின் தோற்றத்தை அப்படியே, அதே வண்ணத்தில் பாதுகாக்க முடியும். இதழ்களை அடுத்த தலைமுறைக்குக் காட்சிப்படுத்துகிற இந்த அரிய முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று பதினைந்து ஆண்டுகளாக இதழ்களைச் சேகரித்து வருவதுடன், அவற்றை குறுவட்டு வழிப்பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள ஒரு தமிழ் ஆர்வலரைப் பற்றி அறிய வந்தால் மனதில் ஒரு வித மகிழ்ச்சி தோன்றாதா?

1983-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம் நல்லாசிரியர் விருது பெற்ற, பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படுகிற ம.நடேசன் அவர்கள் இவ்வரிய பணியில் ஈடுபட்டுள்ளார். கூடவே "எளிய முறையில் தமிழ் கற்பித்தல்", "கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆக்குதல்", "தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்துதல்" போன்றவற்றையும் செய்து வருகிறார்.

ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாறு, குமுகாயத்தின் போக்குகள் முதலானவற்றை அறிந்து கொள்ள இவரது நூலகத்திலுள்ள இதழ்கள் உதவும். இதழியல் துறையில் ஆய்வு செய்வோருக்கும் இது ஒரு களஞ்சியம்.

இதுபோன்று அரிய பணியில் ஈடுபட்டிருப்போரை உலகிற்குக் காட்டும் உருப்படியான பணியை வெகுசன ஊடகங்கள் செய்தால் நன்றாயிருக்கும்.

மேலதிகத் தகவல்களுக்கு...