படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, June 30, 2004

யூரோ 2004 - இறுதியாட்டத்தில் போர்ச்சுகல்

சில நிமிடங்களுக்கு முன்பு நடந்து முடிந்த யூரோ 2004ன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹாலாந்தை 2 - 1 என்ற 'கோல்' கணக்கில் வென்று முதன் முறையாக யூரோ கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்றைய ஆட்டத்தின் முதல் கோலைப் போர்ச்சுகலின் ரினால்டோ முதல் பாதியிலேயே போட்டார். இரண்டாவது பாதியில், மனீஷ் (போர்ச்சுகல்) சற்று தொலைவிலிருந்தே பந்தை அருமையாகக் கோல் கம்பங்களுக்கு இடையில் செலுத்தி வெற்றிக்கு வித்திட்டார். தொடர்ந்து மூன்றாவது கோலும் போர்ச்சுகலினராலேயே போடப்பட்டது, என்ன இம்முறை தங்கள் பகுதிக்குள்ளேயே போட்டுவிட்டார்கள்!

நடந்தது வெகு பிரமாதமான ஆட்டம் என்று சொல்வதற்கில்லை, இருப்பினும் இறுதியாட்டத்திற்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் நல்ல முயற்சி செய்தனர்.

தோல்வியுற்றாலும், அந்த அணி, ஆட்டம் முடிந்ததும், தங்கள் நாட்டைச் சார்ந்த மற்றும் ஆதரிக்கும் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கிவந்து நன்றி தெரிவிக்கும் வண்ணமாக அவர்களின் கைதட்டலை ஏற்றுச் செல்வது நல்ல வழக்கமாகத் தோன்றுகிறது. அதேபோல ஒவ்வொரு போட்டி துவங்கும்போதும், இரு அணிகளும் வரிசையாக நின்று தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ரசிகர்களுடன் இணைந்து பாடும் வழக்கத்தை சிலாகித்துச் சொல்லலாம்.

நாளைய இரண்டாவது அரையிறுதி ஆட்டம்: செக் குடியரசு - கிரீஸ். செக் வெல்லும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.

Thursday, June 24, 2004

யூரோ 2004 - என்ன ஒரு பந்தயம்!

அரங்கு நிறைந்த ரசிகர் கூட்டம் (65,000 பேர் என்று கேட்டதாக நினைவு), ஆட்டம் துவங்குகிறது, மின்னலென ஒரு 'கோலை' மூன்றாவது நிமிடத்தில் இங்கிலாந்து போடுகிறது. அவ்வளவுதான் பிறகு ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் போர்ச்சுகலிடம் போயிற்று (65% பந்தை தன்னகத்தே கொண்டிருந்தனர்). இவர்களும் நன்றாகவே விளையாடினர்; இருப்பினும் 'கோல்' ஒன்றும் விழவில்லை. முதல் இடைவேளியின் போது 1-0.

அதே துடிப்போடு ஆட்டம் தொடர்ந்தது. பல வாய்ப்புகளை நழுவவிட்ட போர்ச்சுகல், 83வது நிமிடத்தில் கணக்கைச் சமன் செய்து உள்ளூர் ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச்செய்தது. இரு அணிகளும் ஆட்டநேரம் முடியும்வரை மேற்கொண்டு எண்ணிக்கையைக் கூட்ட முடியாமற்போகவே கூடுதல் நேர ஆட்டம் நடக்கவேண்டியதாயிற்று.

கூடுதல் நேர முதற் பாதி முடியும்போதும் 1-1 என்றுதான் இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்க கட்டத்தில் போர்ச்சுகல் ஒரு 'கோலை'ப் போட்டு வெற்றியைக் கொண்டாடும் நிலைக்கு வந்ததாகத் தோன்றியது. ஆட்டம் முடிய இன்னும் ஆறே நிமிடம் இருக்கையில், இங்கிலாந்து அருமையான 'கோல்' ஒன்றைப் போட்டு அவர்களது ரசிகர் பட்டாளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். களைத்தே போயிருந்தனர் அனைத்து வீரர்களும். கூடுதல் நேரமும் முடிந்தது; 2-2; இனி 'பெனால்டி'.

முதலில் அடிக்கும் வாய்ப்பு இங்கிலாந்திற்குக் கிடைத்தது. முதல் 'பெனால்டி'யையே வானத்திலா அடிக்கவேண்டும்?! ரசிகர்களின் வயிற்றெறிச்சலை வாங்கிக்கட்டிக் கொண்டிருப்பார் டேவிட் பெக்கம். 5-5 என்று வந்து, கடைசியில் 6வது 'கோலை' போர்ச்சுகல் 'கோல் கீப்பர்' தடுத்து, பிறகு அவரே வந்து தனது அணிக்கான ஆறாவது 'கோலை'யும் போட்டு அரையிறுதிக்கு வழிவகுத்தார். நல்லதொரு வாய்ப்பை இழந்த வருத்தத்துடன் இங்கிலாந்து ரசிகர்கள் வெளியேறத் துவங்கினார்கள் (இவர்களில் சிலர் வெளியில்போய் யாரையாவது அடித்து நொறுக்காமல் இருந்தால் சரி).

முதல் காலிறுதிப்போட்டியே இவ்வளவு பரபரப்பு நிறைந்ததாய் நடந்து முடிந்துள்ளது.

Wednesday, June 23, 2004

யூரோ 2004 - திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும்

இம்மாதம் பன்னிரெண்டாம் தேதி துவங்கிய யூரோ 2004 கால்பந்து ஆட்டத்தின் முதற்சுற்றுப் போட்டிகள் இன்றோடு நிறைவுறுகின்றன (போர்ச்சுகலில்). பதினாரு அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதிக்குச் செல்லும் அணிகள்:
குழு A - கிரீஸ், போர்ச்சுகல்
குழு B - இங்கிலாந்து, ஃப்ரான்ஸ்
குழு C - டென்மார்க், ஸ்வீடன்
குழு D - செக் குடியரசு, நெதர்லாந்து

வெளியில் செல்லும் அணிகள்:
குழு A - ரஷ்யா, ஸ்பெயின்
குழு B - குரேஷியா, ஸ்விட்சர்லாந்து
குழு C - இத்தாலி, பல்கேரியா
குழு D - லாத்வியா, ஜெர்மனி

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மன் ரசிகர்களுக்கு இம்முறை பெருத்த ஏமாற்றம்!

இன்றைக்கு வென்றே தீர வேண்டிய நிலையில் இருந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்த ஜெர்மன் அணி பந்தை எதிராளியின் (செக் குடியரசு) 'கோல்'பகுதியில் வெகுநேரம் வைத்திருந்தும் 'கோல்' விழாமல் போனதையும், பல வாய்ப்புகள் காலுக்கு எட்டி 'கோலுக்கு' எட்டாமல் போனதையும் பார்த்தபோது அவர்களது அதிர்ஷ்டத்தைத்தான் நொந்துகொள்ள வேண்டியிருந்தது. செக் அணி சென்ற பந்தயங்களில் விளையாடிய அளவு இன்று விளையாடாவிட்டாலும் அதன் பக்கம் அதிர்ஷ்டக்காற்று நன்றாகவே அடித்தது. இன்றைய போட்டியில் செக் அணி தோற்றிருந்தாலும்கூட அடுத்த சுற்றுக்குச் செல்லும் அளவிற்கு சிறந்த ஆட்டங்களால் ஏற்கனவே முன்னேறிவிட்டிருந்தனர். அடுத்த முறையாவது ஜெர்மன் அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டட்டும்.

நெதர்லாந்து - லாத்வியாவிற்கு இடையே நடந்த பந்தயத்தில் மூன்று 'கோல்'களையிட்டு நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறிவிட்டது (ஒரு வேளை ஜெர்மனி வென்றிருந்தால் இவர்கள் வந்திருக்க முடியாது, இதையும் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது).

முதல் காலிறுதிப் போட்டி வரும் வியாழன்று (24.06.2004) லிஸ்பனில் சொந்த ஊர்க்காரர்களான போர்ச்சுகலுக்கும், இங்கிலாந்திற்கும் இடையே நடக்கவுள்ளது. பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. காத்திருப்போம்!

Friday, June 18, 2004

சோற்றில் முழுப்பூசணி

பெய்ததோ வான்மழை
பெருகியதோ காவிரி
நிரம்பியதோ அடி அணைகள்
நிர்பந்தமோ கர்நாடகத்திற்கு
குழப்பமோ விவசாயிகளுக்கு
கும்மாளம் மட்டும் நம் அரசியல்வாதிகளுக்கு

Wednesday, June 16, 2004

சதாக்குப்பைகளும் மின்குப்பைகளும்

இந்தியா போன்ற மக்கள்தொகை நிறைந்த நாடுகளில் அன்றாடம் விழும் குப்பைகளைப் பற்றி பெரும் ஆய்வே நடத்தலாம். பொது இடங்களில் குப்பைகளைப் போடுகிறோமே என்ற உணர்வு எந்த மட்டத்திலும் காணப்படவில்லை. எங்கெங்கு காணினும் குப்பையடா! தூய்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைதான் தென்படுகிறது. இவ்வாறாகச் சிதறிக் கிடக்கும் குப்பைகளை ஏதோ ஒரு விதத்தில் சேகரித்து நகராட்சி/பஞ்சாயத்து ஊழியர்கள் நகருக்கு/ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்களில் கொண்டுபோய் அப்படியே கொட்டிவிடுகின்றனர் (அவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும்). திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துக் கவலைப்பட யாருக்கும் அவகாசமோ, அவசியமோ இல்லை; இதுதான் பரந்துவிரிந்த பூமியாயிற்றே!

இந்நிலையில் சமீபத்தில் கண்ட செய்தியொன்று மிகவும் அச்சுறுத்துவதாயிருந்தது. சென்னையில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அது. ஆஸ்த்ரேலிய நிறுவனமொன்று தமிழக அரசிடம் இன்னும் முழுமையாக சோதிக்கப்பட்டு முடிப்படாத தொழில்நுட்பமொன்றை இதற்காக முன்வைத்துள்ளதாம். இத்திட்டத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் ஆபத்துகளையும் பற்றி விரிவாக இந்த இணையப் பக்கத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். முக்கியமாக சென்னைவாசிகள் கவனித்து விவாதிக்க வேண்டிய விஷயமிது (மற்றவர்களும்தான்).

சாதாக்குப்பைகளின் சங்கதிகளே இதுவென்றால் புதிதாக அச்சுறுத்தும் அடுத்த சமாச்சாரம் மின்குப்பைகள். இந்தியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தாலும், மலிவான கூலிக்கு வேலைகள் நடப்பதாலும் வளரும் நாடுகளில் முறையாகச் சுழற்சிக்கப்பட வேண்டிய மின்சாதனக் குப்பைகள் இந்தியாவிற்குத் திருப்பிவிடப்படுகின்றனவாம். அந்நாடுகளில் சுழற்சிக்க ஆகும் செலவைவிட இந்தியா போன்ற நாடுகளில் கொட்டிவிடுவது அவர்களுக்கு மிகவும் செலவு குறைந்ததும், வசதியானதுமாகும். சட்டங்களும், விதிமுறைகளும் வலுவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தாவிடில் விரைவில் இந்தியா ஒரு மின்குப்பை மேடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுபற்றிய விளக்கமான கட்டுரை ஒன்றை இங்கே காணலாம். ஜப்பானுக்கு சீனா மின்குப்பை மேடென்றால், அமெரிக்காவிற்கு இந்தியா. ம்...!

நன்றி!

விடுமுறை வாழ்த்து தெரிவித்த இணைய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! காசி அவர்களுக்கு தகுந்த நேரத்தில் பதில் தெரிவிக்க முடியாததில் ஓர் ஆதங்கம்.

விடுமுறை (விடுமுறை போலவே இல்லை, அலைச்சல்கள்தான் அதிகம்) முடிந்து வந்து சில நாட்கள் ஆகியும் சில காரணங்களால் எழுத இயலவில்லை. தொடர்ந்து எதையாவது கிறுக்க முயற்சிக்கிறேன்.