படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, May 06, 2004

விடுமுறை

கடந்த சில நாட்களாக ஊருக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததால் வலையில் எதையும் பதிக்க முடியவில்லை. ஒரு வழியாக நேற்று மூட்டை முடிச்சுகளை விமான நிலையத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாயிற்று. இந்த 'ப்ரி-செக்இன்' வசதியால் போகும் நாளன்று அதிக சிரமப்படவேண்டியதில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துவைப்பது, அஞ்சல் நிலையத்தில் கடிதங்களை வைத்திருக்க வேண்டி எழுதிக் கொடுப்பது, வீட்டில் ஏதாவது செடிகள் இருந்தால் தெரிந்தவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்வது, அது இது என்று அப்பப்பா...!

ஒன்டிக்கட்டையாக இருந்த காலத்தில் எல்லா சமாச்சாரங்களையும் ஒருநாளில் முடித்துவிடலாம். இம்முறை முதல்தடவையாக குழந்தையையும் எடுத்துச் செல்வதால் கேட்கவே வேண்டாம். போதாதற்கு லேசான தூறல் வேறு. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் விமான நிலையம் செல்லவேண்டும். முதன்முறையாக சென்னை வழியாக கோவைக்குச் செல்கிறேன். வழக்கமான வழி மும்பை (இவ்விமான நிலையத்தைப் பற்றி எனக்கு இன்னும் நல்ல அபிப்பிராயம் வரவில்லை). நான்கு வார விடுமுறையின்போது ஊரில் உள்ள சமயத்தில் வலைப்பதிவுகளைப் படிக்கவோ, எழுதவோ முடியுமா என்று தெரியவில்லை, முயற்சி செய்கிறேன்.

அன்பான வேட்பாளப் பெருமக்களே! எங்கள் வீட்டின் சார்பாக உங்கள் யாரேனுக்கும் இரண்டு 'பொன்னான வாக்குகள்' கண்டிப்பாக உண்டு. வருவதற்குள் ஆட்களை வைத்து 'கள்ள ஓட்டைப்' போட்டுவிடாதீர்கள்!

Sunday, May 02, 2004

எழுத்துச் சீர்திருத்தம்!

தமிழ் எழுத்துகளில் முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தூவப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கில வார்த்தைகள், மெல்லமெல்ல அங்கிங்கெணாதபடி எங்கும் நிரம்பத் துவங்கியது; அதன் 'வளர்ச்சி' தொடர்ந்துகொண்டும் உள்ளது. தமிழின் இவ்'வளர்ச்சி'க்கு பத்திரிக்கைகள் ஆற்றிய, ஆற்றும் தொண்டு மகத்தானது. அவ்வரிசையில் மற்றுமொரு மைல்கல் - ஆங்கில (ரோமன்) எழுத்துகளிலேயே தமிழை எழுத ஆரம்பிப்பது. எப்படியென்றால் - "Siரிப்பு Maaமே, Siரிப்பு!" (ஆனந்த விகடன் - 05.05.04 இணையப்பதிப்பு). பிறகு உயிர், மெய், உயிர்மெய்யெல்லாம் தேவையில்லை; அனைத்தையும் இருபத்தாறு எழுத்துகளுக்குள் அடக்கிவிடலாம். தமிழில் 'எழுத்துச் சீர்திருத்தம்' நடைமுறைக்கும் வந்துவிடும். பொறுங்கள் தமிழர்களே, இது முழுமைப்பட்டு பட்டிதொட்டியெங்கும் வந்து சேருவதற்கு இன்னும் சில பதிற்றாண்டுகளே தேவை. கணினியாளர்கள் டிஸ்கி, யுனிகோடு முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ளவும்வேண்டியதில்லை.

[திருத்தங்கள்: 04.05.2004 - Siரிப்பு Maaமே, Siரிப்பு! மற்றும் ஆனந்த விகடன் ஆகியவற்றிற்கான சுட்டிகள் சேர்க்கப்பட்டன.]

Saturday, May 01, 2004

கற்கால மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள்!


நாய்கள்கூட இவ்வாறு செய்யுமா?

என்ன பாவம் செய்தார்கள ஈராக்கிய மக்கள்? தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடைகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், மக்களும் சரியான உணவு, மருந்தின்றிக் கொல்லப்பட்டனர். பிற்பாடு பேரழிவு ஆயுதங்களை அழிக்கிறோம் (இவர்களிடம் இல்லாதாதா இல்லை இவர்களால் உபயோகப்படுத்தப்படாததா?), கொடுமையான சர்வாதிகாரியை தூக்கி எறிந்து மக்களுக்கு விடுதலை அளிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, நொடிந்துபோன நாடொன்றை மிக நவீனத் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், படைகளால் கேவலமாக ஆக்கிரமித்து அட்டூழியம் செய்தனர்.

இப்போது அந்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் படலத்தை ஆரம்பித்துள்ளனர் சில ஜந்துகள். ஒன்றுமே செய்யாத ஓர் இளைஞனைப் பிடித்து எப்படியெல்லாம் சித்ரவதை செய்துள்ளனர்! சதாமைக் கொடுமைக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்? இவர்களுக்கிடையில் ஏதாவது வித்தியாசம் உண்டா?