படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 29, 2004

ஜெருசலேம் - அகமதாபாத்

ஜெருசலேம் நகரில் இன்று நடந்த பேருந்து தற்கொலைத் தாக்குதலுக்கு ஆளாகி பலர் மாண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு பாலஸ்தீனத் தீவிரவாதக் குழுவொன்று 'பொறுப்பும்' ஏற்றுள்ளது! இவர்கள் சொல்லும் காரணம் - ஓரிரு நாட்களுக்கு முன் இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியில் நடத்திய 'தேடுதல் வேட்டை'யும் அதன் விளைவாக நடந்த சாவுகளும். இன்றைய பேருந்து நிகழ்வைக் காரணம் காட்டி இஸ்ரேல் மீண்டும் சில தாக்குதல்களைக் கண்டிப்பாக நடத்தும். 2000-மாவது ஆண்டு செப்டம்பரில் துவங்கிய இந்த சமீபத்திய கொந்தளிப்பு/அமைதியின்மை தாக்குதல்-பதில் தாக்குதல் என்று சொல்லி பல நூற்றுக்கணக்கான உயிர்களை இருதரப்பிலும் பலிவாங்கியுள்ளது, இன்னும் நிற்பதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் 'அமைதி' முயற்சியிலும் சொல்லிக்கொள்ளும்படி எந்தவித முன்னேற்றமும் காணவில்லை. என்றுதான் இப்பிராந்தியத்தில் அமைதி திரும்புமோ!

இன்னும் சில நாட்களுக்கு இந்திய ஊடகங்களில் அகமதாபாத் நீதிமன்ற கையூட்டு விஷயம் பெருமளவில் இடம் பெறும். அப்புறம் எல்லோரும் மறந்து விடுவோம்! மறுபடியும் வேறெங்காவது 'இப்படி நடந்து' என்று செய்திவரும், 'ஓ அப்படியா' என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். தெகல்காவிற்கு நடந்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதானே! நடப்பவைகளைக் கண்டால் சமுதாயத்தின் மீது நம்பிக்கை வருவேனா என்கிறது. :(

Sunday, January 25, 2004

சதாம்?

அமெரிக்காவின் அந்நாளைய 'நண்பரும்' இந்நாளைய 'எதிரியும்' என்னவானார் என்று தெரியவில்லை. இதில் பரபரப்பு ஏதுமில்லாததால் ஊடகங்களுக்கும் அவ்வளவு ஆர்வமில்லை போலுள்ளது. கைது நாடகத்தின் படங்கள் சில காணக்கிடைத்தன.

Thursday, January 15, 2004

போகி - பொங்கல்

ஊரில் வழக்கமாக போகிப் பண்டிகை நாளுக்கு முன்பே வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடித்து முடித்திருப்பார்கள். இந்நாளன்று முக்கியமான ஒரு வேலை வீட்டிற்குக் காப்பு கட்டுவது. அக்கம்பக்கம் இருக்கும் வேப்ப மரங்களுக்கு வாயிருந்தால் அழுதே விடும், அந்த அளவிற்கு அதன் சிறு கிளைகள் ஒடிக்கப்பட்டுவிடும். வேப்ப இலைகளோடு பூழைப் பூக்குச்சிகள் வெள்ளையடித்த வீடுகளின் ஓட்டு இடுக்குகளில் அந்தி சாயுமுன் சொருகப்பட்டுவிடும். மாலை ஒவ்வொரு வீட்டிலும் வாசலை சாணத்தால் மெழுகி வண்ணக் கோலங்களால் நிரப்புவார்கள். வருடங்களாயிற்று இவற்றையெல்லாம் பார்த்து!

இப்போது போகிப் பண்டிகையைக் கொண்டாடுவதாகச் சொல்லிக் கொண்டு ரப்பர் டயர்கள், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை எரித்து விமானப் போக்குவரத்தையே சற்று பாதிக்குமளவிற்கு செய்துவிட்டதாம் சென்னையில் ஒரு கூட்டம்! (நேற்றைய thatstamil.com-ல் வந்த செய்தி). அபத்தங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

பொங்கல் நாள் பெரும்பாலும் வெறுமனே கழியும், இல்லையென்றால் உறவினர்/நண்பர் யாராவதின் தோட்டத்திற்கு மாட்டுப் பொங்கல் கொண்டாட பயணிப்போம். இந்நாளை ஒட்டிய பல நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Saturday, January 10, 2004

இன்று மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பவும், சில பதிவுகளுக்குப் பின்னூட்டுகள் கொடுக்கவும் மட்டுமே முடிந்தது. நாளை எழுத முயற்சிக்கிறேன்.

Thursday, January 08, 2004

தமிழகக் காவிரி விவசாயிகளின் சோகம்

நேற்றைய தினமணியில் (07.01.2004) வெளியாகியிருந்த காவிரி விவசாயிகளைப் பற்றிய கட்டுரை (அழிவின் நிழலாடும் காவிரிப் பாசனப்பகுதி) மனதிற்கு வேதனையளிக்கக் கூடியதாக இருந்தது. மேட்டூர் அணையில் நீரில்லை, மழையில்லை, கர்நாடகத்தின் முரண்டு காரணமாக ஆற்றிலும் நீரில்லை, என்னதான் செய்வார்கள் விவசாயிகள்! இவ்விவகாரத்தை வைத்து நன்றாக அரசியல் செய்கிறார்களே ஒழிய உருப்படியான தீர்வு காண்பாரில்லை.

விவசாயிகளும் நிலைமையைக் கருத்தில் கொண்டு நெற் சாகுபடியை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாற ஆரம்பிப்பது நல்லது. வேளாண் அறிஞர்கள், அதிகாரிகள் முன்வந்து விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் முறைகளை அறிமுகப்படுத்தி அவற்றைப் பயிரிட ஊக்குவிக்கவேண்டும். வங்கிகள் (ஏராளமான பணத்தைக் கையிருப்பில் வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்) இச்சமயத்தில் நிறைய விவசாயக் கடனுதவிகள் வழங்க முன் வர வேண்டும். எத்தனையோ பணம் விழுங்கி நிறுவனங்களுக்கு கொடுப்பதைவிட துயர்ப்படும் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து நஷ்டப்படுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

பணத்தாளிலும் விளம்பரம்

இனி எப்போதாவது அமெரிக்கப் பணத்தாள் ஒன்றில் ஏதாவது குரங்கின் படமோ இல்லை வேறு படமோ ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டால் ஆச்சரியப்படத் தேவையில்லை. விளம்பரம் செய்வதற்கான புதிய உத்தியாமிது! மேலதிகத் தகவல்கள் இங்கே.

Wednesday, January 07, 2004

தமிழகராதியைத் தேடி

தமிழா! குழுவினர் தமிழ் சொல்திருத்தி நிரலி ஒன்றை உருவாக்கும் முயற்சியின் முதற்கட்டமாக வார்த்தைப் பட்டியல் ஒன்றை (அகராதிகளைப் பயன்படுத்தி) தயாரிக்கத் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆர்வலர்களுக்கு சம்பந்தப்பட்ட மடற்குழு மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் - அகராதி ஒன்றை சுலபமாக வாங்கி வார்த்தைகளைப் பட்டியலிட்டுவிடலாமென்ற நினைப்பில்.

சென்ற திங்களன்று அலுவலகம் முடிந்த பின் அகராதியைத் (க்ரியாவின் தற்காலத் தமிழகராதி) தேடிக் கிளம்பினேன். தெரிந்த தமிழ்க் கடைகளிலெல்லாம் ஏறி இறங்கினேன்; கிடைப்பதாகத் தெரியவில்லை. ஒரு சில வாரங்களுக்கு முன் கண்காட்சி ஒன்றில் இப்புத்தகத்தைக் கண்டபோது, பிறகு வாங்கிக் கொள்ளலாமென்றுவிட்டதன் விளைவு அன்று தெரிந்தது :(. ஒரே ஒரு கடையில் வாங்கமுடியாத அளவுக்கு அழுக்குப் படிந்தும், கிழிந்தும் ஒரு பிரதி தென்பட்டது; சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தை இந்நிலையில் வைத்து விற்கும் கடைக்காரரை மனதால் 'வாழ்த்திவிட்டு'வாங்கமலேயே திரும்பினேன்.

அதன் அருகிலுள்ள சர்தார் கடையொன்றிலும் தமிழ் இதழ்களும், சில புத்தகங்களும் விற்பார்கள். கடைக்காரரிடம் தமிழகராதியைப் பற்றிக் கேட்டதற்கு அங்கொரு புத்தகம் இருந்ததே என்று கூறிக்கொண்டே 'கல்லா'விலிருந்து புத்தகப்பகுதியை நோக்கிச் சென்றார். ஆவலுடன் பின்தொடர்ந்து சென்று பார்த்தேன்; அவர் அகராதி என்று நினைத்து வந்து காண்பித்தது 'பரிசுத்த வேத ஆகம'த்தை. பாவம் அவர் என்ன செய்வார்! அன்றைய தேடுதல் வேட்டையின் பயனாக பொதினா மற்றும் பொன்னாங்காணிக் கீரைக் கத்தைகள் வீடு வந்து சேர்ந்தன. :)

செவ்வாய்க்கிழமை நண்பர் ஒருவரிடம் அகராதியைப் பற்றிக் கேட்க, ஒரு சில விநாடிகளுக்கு நான் என்ன கேட்கிறேன் என்றே அவருக்குப் புரியவில்லை. 'அகராதியா?!' என்றவரிடம் 'டிக்ஸ்னரி' என்று தமிழில் சொன்ன பிறகு சட்டெனப் புரிந்தவராக விசாரித்துச் சொல்கிறேனென்று சொல்லிச் சென்றுவிட்டார். வாழ்க தமிழர்! வேறொரு இடம் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்ற நேரத்திற்கு அக்கடை அடைக்கப்பட்டிருந்தது. :(

இன்று அக்கடைக்கு தொலைபேசியில் அழைத்துக் கேட்க, கதைப்புத்தகங்கள் மட்டுமே அங்கு விற்பதாகச் சொல்லிவிட்டார்கள். கடைசியாக இந்தியாவிலிருந்தே ஒரு பிரதியை அஞ்சலில் அனுப்பி வைக்குமாறு தகவல் ஊருக்குத் தகவல் அனுப்பிவிட்டேன்; வந்து சேர ஒரு வாரத்திற்கு மேலாகிவிடும். அந்நேரத்தில் நண்பர்கள் பட்டியலைத் தயாரித்து முடித்திருப்பார்களோ என்னவோ!

Sunday, January 04, 2004

இசை/கச்சேரி பற்றி நா.கண்ணன், காசி ஆகியோர் எழுதியுள்ள வலைப்பதிவுகள் இதுபற்றி சில எண்ணங்களை முன் கொணர்கின்றன.

1. கச்சேரிகளில் (இதுவரை கச்சேரிகளுக்குக்கெல்லாம் சென்று சங்கீதம் கேட்டதில்லை) வித்துவான்கள் தமிழில் அவ்வளவாகப் பாடுவதில்லை என்கிறார்கள்; தமிழில் பாடல்களுக்குக் குறைவா என்ன? தமிழில் பாடினால் அகெளரவம் என்று நினைக்கிறார்களோ என்னவோ!
2. தமிழகத்தில் பெரியவர் சுப்புடு போன்று நிறைய இசை விமர்சகர்கள் உள்ளனரா (நான் அறிந்ததில்லை)? உண்டெனில் இசைக்கும், கலைஞர்களுக்கும் நல்லது.
3. கச்சேரி அரங்க, ஒலி அமைப்புகளிலும், கச்சேரி கேட்கப் போகும் சில நபர்களிடத்தும் ஒரு நேர்த்தி (professionalism-ற்கு என்னாங்க சொல்றது?) காணப்படாததேன்? ("...மைக் செட் தகராறு செய்தாலும், ஏர் கண்டிஷன் திடீரென்று துருவப் பிரதேசத்தையும் அடுத்த நொடியில் சஹாரா பாலைவனத்தையும் சிருஷ்டித்தாலும், யார் குறுக்கே மொபைலோடு நடந்தாலும்..." )

Thursday, January 01, 2004

பட்டப்பெயர்கள்

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், திரைப்படக்காரர்கள், இத்யாதி பெயர்களின் முன்பு ஏதாவது ஒரு பட்டப்பெயர் இல்லாதிருந்தால் அது அபூர்வமே! சிலர் இப்பெயர்களாலேயே எப்போதும் அழைக்கப்படுகின்றனர்! இவ்வாறு பெயர் வைத்துக்கொள்ளும் (சிலருக்குத்தான் பிறர் வைக்கிறார்கள்) பழக்கம் தமிழர்களிடம் மட்டுமே உள்ளதெனத் தோன்றுகிறது. இது ஒரு வகை வியாதியா அல்லது தனித்துவமா?
ஒரு வழியாக நானும் எழுத ஆரம்பிக்கிறேன்!